4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

 
Shevapet Shevapet

சேலத்தில் 4 வயது பெண் குழந்தையை அவரது பாட்டியே கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சூரமங்கலம், போடிநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விமல்குமார் (30). இவர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேகலா (25). இந்த தம்பதிக்கு மதுபிரித்திகா (4) என்ற பெண் குழந்தையும், பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையும் இருந்தது. புதிதாக குழந்தை பிறந்துள்ளதால், குழந்தைகளுடன் மதுபிரித்திக்காவை, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டில் விமல்குமார் விட்டிருந்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை மேகலா துணி காயவைக்க மாடிக்குச் சென்று இருந்தார். அப்போது 4 வயது குழந்தை மதுபிரித்திகா கதறி அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மேகலா கீழே வந்து பார்த்தபோது குழந்தை மதுபிரித்திகாவையும், தாயார் சாந்தியையும் (50) காணவில்லை. வீட்டில் உள்ள அறை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மேகலா அக்கம் பக்கம் இருந்தவர்கள் அழைத்துக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்றார்.

Dead

உள்ளே சென்று பார்த்தபோது அவரது தாயார் சாந்தி குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தார். பிறகு பொதுமக்கள் குழந்தையை சாந்தியிடம் இருந்து மீட்டு உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்விட்டதாக தெரிவித்தார்.

மேலும் குழந்தையின் கழுத்தில் நகக்கீரர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. பெண் குழந்தையை பாட்டியே  கொன்ற சம்பவம் அறிந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தார். குழந்தை இருந்த இடம், குழந்தையை தூக்கிச் சென்று அறையில் அடைத்த பகுதி ஆகியவற்றை நேரில் சென்று விசாரணை செய்தார் .

Shevapet PS

இதையடுத்து இது குறித்து விரிவான விசாரணை செய்ய சேலம் டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன் மற்றும் செவ்வாய்பேட்டை போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்தார். முதற்கட்ட விசாரணையில் மேகலாவின் தாயார் சாந்தியின் மற்றொரு மகள் கடந்த 10 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் என்பதும் அதிலிருந்து சாந்தி அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகவும், இதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தெரியவந்தது.

வீட்டில் யாரும் இல்லாததால் சாந்தி குழந்தையை தூக்கி சென்று அறையில் வைத்து கொன்றுள்ளார். ஏன் அவர் குழந்தையை கொன்றார்? என தற்போது போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது சாந்தி செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web