அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்!
காங்கேயம் அருகே அரசு பேருந்துடன் கார் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் கிராமத்தில் இன்று அதிகாலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் (60), அவரது மனைவி சித்ரா (57), இளவரசன் (26), அரிவித்ரா (30), மூன்று மாத பெண் குழந்தை சாக்சி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சந்திரசேகரின் 60 வது பிறந்தநாளையொட்டி அவர்கள் திருக்கடையூர் சென்று காரில் திருப்பூர் திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக கோவை- திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்துபேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.