சீட்டு கிடைச்சாச்சு.. உக்காந்துரனும்.. கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு!!
தமிழிலிருந்து வந்தது தான் கன்னடம் என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடாகாவில் பாஜக மற்றும் சங்பரிவார ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தக் லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடாக உயர்நீதிமன்றத்தை கமல்ஹாசன் தரப்பு நாடிய நிலையில், முதலில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும். ராஜாஜியே இப்படிப் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்தக் கருத்துக்கு சட்டவல்லுனர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை தற்போது வெளியிடப் போவதில்லை என்ற முடிவை கமல்ஹாசனும் எடுத்துள்ளார். இந்த சூழலில் சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் பட விழாவில் பேசிய கமல்ஹாசன். உயிரே உறவே தமிழே என்று நான் சொன்னதற்கு அர்த்தம் இன்று புரிகிறது. தமிழ்நாடு என்னுடன் இருப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.
படத்தில் பணிபுரிந்த அனைவரையும் பாராட்டிய கமல், நடிகர் வையாபுரியைப் பார்த்து, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த வையாபுரியை நான் தான் கண்டெடுத்தேன். இன்று எங்களுடன் இணைந்து நடிக்கிறார் என்று பாராட்டினார். அப்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த வையாபுரியை பார்த்து, உக்காருங்க உக்காருங்க, சீட்டு கிடைச்சாச்சு உக்கார்ந்துரனும்”, ரொம்ப கஷ்டம் அந்த நிலையிலிருந்து வந்த அவருக்குத் தான் தெரியும் என்று பேசினார்.
வையாபுரியைப் பார்த்துச் சொன்னாலும், எம்.பி. சீட்டு கிடைச்சாச்சு உக்காந்துரனு என்று தன்னுடைய அரசியல் பயணத்தைத் தான் கமல்ஹாசன் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. மேலும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக தமிழ்-கன்னடம் பிரச்சனையில் வியாபார லாபத்தை தள்ளி வைத்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பதால், தமிழ்நாட்டில் கமல்ஹாசனுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
இன்று உலகமெங்கும் தக் லைஃப் படம் வெளியாகிறது. அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமையே தக் லைஃப் படம் வெளியாகிவிட்டது.
