ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. நலவாரியம் அமைத்தது தமிழ்நாடு அரசு!

 
GIG

இணைய செயலிகள் வாயிலாக டெலிவரி சேவையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு என நலவாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஓலா, உபெர், ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை கார், பைக் டாக்சி ஆகியவற்றை இயக்கி வருகின்றனர். அதேபோல ஸ்விகி, செமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவை மூலமாக மளிகை மற்றும் இன்னும் பிற பொருட்களின் டெலிவரி நடைபெறுகிறது.

பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் அவர்களுக்கு பணியிட பாதுகாப்போ, பணி நிரந்தரமோ கிடையாது. இதுபோன்ற பணிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் இருந்தன.

GIG

இந்த நிலையில், இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிலாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட இவ்வரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில், உணவு விநியோகம், மின்-வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிக பொருட்களின் விநியோகங்கள், இணைய செயலி வழியாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள் மற்றும் இதர சேவைகள் தற்போது இணையவழி கிக் (Gig) முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

GO

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இணைய வழியே உணவு விநியோகம் உள்ளிட்ட சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, ‘தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் நலவாரியம்’ எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிக் தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

From around the web