வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி சிறுமி பரிதாப பலி.. தாயின் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
வால்பாறை அருகே 6 வயது குழந்தையை தாயின் கண் முன்னே சிறுத்தை தாக்கி இழுத்து சென்று கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கோன்டா பகுதியைச் சேர்ந்தவர் அனுல் அன்சாரி. இவர் கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தனது இரண்டு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அனைவரும் வீட்டில் இருந்து உள்ளனர். அணுல் அன்சாரி மற்றும் நசிரென் காத்துன் மற்றும் 6 வயது குழந்தை அப்சரா காத்துன் தேயிலை தோட்டத்தில் நின்று உள்ளனர்.
அப்போது அங்கே பதுங்கி இருந்த சிறுத்தை, திடீரென சிறுமி அப்சராவை கடித்து இழுத்துச்சென்றது. இதைக்கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார். இதை பார்த்த மக்கள் சிறுத்தையை விரட்டி சென்று உள்ளனர். அப்போது சிறுத்தை குழந்தையை தேயிலை தோட்டத்தில் விட்டு சென்றது. ஆனால் அதற்குள் குழந்தை இறந்துவிட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் வனத்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.