தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள்!

 
Medical Camp

தமிழ்நாடு அரசு சார்பில் இன்று 2,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காய்ச்சல், இருமல், சளி மற்றும் மழைக்கால நோய்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் இன்று 2,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Camp

அந்த வகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சல் பரவல் தற்போது அதிகரித்து இருப்பதால் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்றன. அதில் 5,21,853 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். மழைப்பொழிவு அதிகமாக உள்ள காரணத்தினால் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி மதுரை, திருச்சி, கோவை, திண்டுக்கல் என தமிழகம் முழுவதும் இன்று கூடுதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

MAS

அதன்படி இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த முகாம்கள்  நடைபெறும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு  தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். மழைக்கால நோய்களிடமிருந்து தங்களைத் தற்காத்து கொள்ள இந்த பரிசோதனை அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web