திருச்செந்தூரில் பக்தர்களை மீட்க இலவச பேருந்து.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

 
Tiruchendur

திருச்செந்தூர் கோவிலில் சிக்கி உள்ள பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு இலவச பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதி கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய் மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலில் சிக்கி உள்ள பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு இலவச பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

bus

அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து கழகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் பெருமளவில் சிக்கிக் கொண்டு 3 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த மக்களை தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லும் வகையில் இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனமழையின் போது திருநெல்வேலி - திருச்செந்தூர் வந்த பக்தர்கள் சாலையின் துண்டிப்பின் காரணமாக பாதி வழியில் அவதிப்பட்டனர். அவர்களை மீண்டும் திருச்செந்தூருக்கு கொண்டு சேர்க்கும் பணியும் போக்குவரத்து துறை இலவசமாக மேற்கொண்டது.

minister-sivasankar-press-meet

அதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் ரயில் நிலையத்தில் தவித்த பயணிகளை அவர்களின் சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. கன்னியாகுமரி மற்றும் தென்காசி  மாவட்டங்களில் 95 சதவீதம்  போக்குவரத்து சேவை நடைபெறுகிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாத காரணத்தினால் போக்குவரத்து சேவை சில பகுதிகளில் வழங்க முடியாத நிலை உள்ளது.

அங்கு வெள்ள நீர் வடிந்தவுடன் பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைகள் நீரில் மூழ்கி உள்ளது. பல பேருந்துகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது ஆய்வு பணி முடிந்தவுடன் சேதத்தின் மதிப்பு தெரிய வரும்.” என்று கூறினார்.

From around the web