கழிவறை பீங்கானில் சிக்கிய 4 வயது சிறுவனின் கால்.. போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.. பரபரப்பு வீடியோ!

 
Mylapore

சென்னையில் கழிவறை பீங்கானில் சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவனின் காலை, சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே லஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர், பிரபல கார் கம்பெனி செய்தி தொடர்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதிக்கு தீரன் (4) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் மாலை கழிவறைக்கு சென்ற சிறுவன் தீரன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.

Mylapore

அப்போது சிறுவனின் கால் கழிவறை பீங்கானின் உள்ளே சிக்கிக் கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாததால் சிறுவன் கூச்சலிட்டுள்ளான். இதையடுத்து பெற்றோர் சிறுவனின் காலை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால், முடியாமல் போனதை அடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்புத் துறையினர், சிறுவனின் காலை வெளியே எடுக்க முயற்சித்த போது கால் பீங்கானின் உள்ளே வசமாக சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பயத்தில் உறைந்து போன சிறுவனுக்கு ஆறுதல் கூறியபடியே அவனது கவனத்தை திசை மாற்றி பீங்கானை முழுமையாக உடைத்து காலுக்கு சிறு காயம் கூட ஏற்படாமல் பத்திரமாக மீட்டனர்.

தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் காலை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web