கடலில் மூழ்கி 4 பேர் பலி.. மகளை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து பலியான சோகம்!

 
Chennai

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட சென்ற 5 பேரில் 4 பேர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர் சிவதாணு (46 ). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர். புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் அனைவரும் நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர். சிவதாணு தனது 19 வயதான மகள் நிவேதிதாவையும் அங்கு அழைத்து சென்றார்.

அங்கு அவா்களில் 9 பேர், கடலில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் மாலையில் குளித்தனா். அப்போது பெரிய அலையில் 9 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். நீச்சல் தெரியாத அவா்களின் அலறல் சப்தத்தைக் கேட்ட, கரையில் இருந்த சிவதாணு, தனது மகள் நிவேதிதாவை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றாா். ஆனால் அவரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா்.

water

அவா்களை மீட்கும் முயற்சியில் அங்கிருந்த பொதுமக்களும், மீனவா்களும் ஈடுபட்டனா். இதில் 4 பேரை பாதுகாப்பாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலைப் பகுதியைச் சோ்ந்த சு.பிரசாந்த் (18), துரைப்பாக்கம் பாா்த்தசாரதி தெருவைச் சோ்ந்த ஜெ.மானஸ் (18), நவீன் (26), நிவேதிதா ஆகியோா் தண்ணீரில் மூழ்கியதால், உடனடியாக மீட்க முடியவில்லை. சிறிது நேர தேடுதலுக்கு பின்னா் நிவேதிதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதேவேளையில் சடலமாக சிவதாணு, நவீன் ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டனா். இருவா் சடலங்களையும் கானத்தூா் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னர் கடலில் மூழ்கி காணாமல்போன பிரசாந்த், மானஸை போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினா், கடலோர காவல் படையினா் உதவியுடன் திருவான்மியூா் தொடங்கி மாமல்லபுரம் வரையில் இரவு முழுவதும் படகில் தேடினா்.

Kanathur

மேலும் கடலோரக் காவல் படையினா் ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை தேடுதல் பணி நடைபெற்றது. இதில் முட்டுக்காடு கடல் பகுதியில் மிதந்த பிரசாந்த் சடலம் மீட்கப்பட்டது. முட்டுக்காடு எம்.ஜி.எம். கடற்கரையோரம் மானஸ் சடலம் ஒதுங்கியது. இந்த சம்பவம் தொடா்பாக கானத்தூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். மானஸ், பிரசாந்த் சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தனா். இவா்கள் பகுதி நேர பணியாளா்களாக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web