முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்.. மகனின் திருமண நிகழ்ச்சியில் சோகம்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் திருப்பதியில் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த கோவை செல்வராஜ், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்த போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிர ஆதரவாளராக கோவை செல்வராஜ் அறியப்பட்டவர்.
குறிப்பாக கோவையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமாரை எந்த அளவுக்கு தர லோக்கலாக இறங்கி கடுமையாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து வந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து அவரது அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் திமுகவில் கோவை செல்வராஜிக்கு திமுகவின் செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு விவாத மேடைகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட மயங்கியுள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.