திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

 
Ku Ka Selvam

திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர் கு.க.செல்வம். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கிப் பழகியவர். மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

Ku Ka Selvam

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தவர், திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து பேசி வந்தார். பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.

இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மீண்டும் திமுகவில் இணைந்த அவர் மீண்டும் திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்டடார்.

Ku Ka Selvam

இந்தநிலையில் திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்குப் பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web