ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு.. அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.. 5 மணி நேரம் நடந்த விசாரணை நிறைவு

 
MR Vijayabaskar

தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

MR Vijayabhaskar

 இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இது ஒருபக்கம் இருக்க, ஒரு மாதத்திற்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக  இருந்து வருகிறார். இதனால், அவரை கைது செய்ய  சிபிசிஐடி போலீசார்  தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து அவரை கரூர் அழைத்து வந்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

From around the web