தப்புதான் மன்னித்து விடுங்கள்... வாக்குவாதம் செய்த பெற்றோர்... காலில் விழுந்த ஆசிரியர்!!

ஆற்றில் குளிக்கும்போது உயிரிழந்த மாணவியின் தந்தையின் காலில் விழுந்து பள்ளியின் உதவி தலைமையாசிரியை மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் இருந்து 15 மாணவிகள் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக, கடந்த 15-ம் தேதி தொட்டியத்திற்கு சென்றனர். அங்கு போட்டியில் கலந்து கொண்டு விளையாடி முடித்துவிட்டு, வீடு திரும்பும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி அணையில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து மாணவிகளை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அழைத்துச் சென்று அஜாக்கிரதையாக நடந்து கொண்டதாக கூறி 2 ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிய 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இச்சம்பவம் மாணவ-மாணவிகளை பாதிக்காமல் இருக்க பள்ளிக்கு கடந்த நான்கு நாட்களாக விடுமுறை அறிவித்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. மாணவ – மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு வழக்கம்போல் வருகை தந்து, மனதில் கனத்த இதயத்தோடு உயிரிழந்த தங்களுடைய நான்கு தோழிகளுக்கும் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பிரேயர் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சக மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர்.
இதன் பிறகு பள்ளி திறந்த உடன் உதவி தலைமை ஆசிரியர் பரிமளா, உயிரிழந்த மாணவ - மாணவிகளின் பெற்றோர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் பெற்றோர்கள், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த சில பெற்றோர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேசி இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.