ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி பலி.. மகன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!

 
Chennai

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மகன் கண் எதிரே இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பெண் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 4 மாதங்கள் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பரிகெட் டைலர் (84). இவர், லண்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் மசாஜ் தெரப்பிஸ்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தனது மகன் ரூபர்ட்டைலர் (58) என்பவருடன் மூதாட்டி மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

அங்கு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தாய், மகன் இருவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று மாமல்லபுரம் புராதன சிற்பங்களை சுற்றி பார்த்த இருவரும் பிறகு மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று சிறிது நேரம் பொழுதை கழித்தனர். அப்போது 2 பேரும் கடலில் குளித்தனர். 84 வயதை கடந்த மூதாட்டி பிரிக்கெட் டைலர் கடல் பலத்த சீற்றமாக இருந்தபோதும், எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தைரியமாக மாமல்லபுரம் கடலில் பலத்த அலைகளின் மத்தியில் குளித்து கொண்டிருந்தார்.

water

அப்போது மூதாட்டி பிரிக்கெட் டைலர் திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்த அவரது மகன் ரூபர்ட்டெய்லர் தனது தாயை காப்பாற்ற முயன்றார். 100 மீட்டர் தொலைவிற்கு அவரது உடல் கடலில் அடித்து செல்லப்பட்டதால், தாயை அவரால் காப்பாற்ற முடியவில்லை. பிறகு ஒரு மணி நேரம் கழித்து மூதாட்டி பிரிக்கெட் டைலர் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிதாஸ்ரீ, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mamallapuram PS

பின்னர் இங்கிலாந்து நாட்டு பெண் சுற்றுலா பயணி கடலில் மூழ்கி இறந்தது பற்றி சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்த அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தூதரகத்தின் அனுமதியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்ப போலீசார் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

From around the web