இந்தியாவிலேயே முதன்முதலாக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதன் முதலாக பாலத்தின் மேலே மெட்ரோ ரயில் செல்ல இருக்கிறது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின் போது சென்னையில் இரண்டு மெட்ரோ வழித்தடங்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டது. 2011ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். பின்னர், உலகமெங்கும் தோல்வி அடைந்த மோனோ ரயில் திட்டத்தை கைவிட்டு, மெட்ரோ பணிகளை ஆற அமர முடித்தனர். ஆனால் தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டிய அடுத்தடுத்த வழித்திட்டங்களை 10 ஆண்டுகளாக கைவிட்டது அதிமுக அரசு.
2021ல் மீண்டும் திமுக ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைந்தவுடன் மேலும் 3 வழித்தடங்களுக்கான திட்டங்களை அறிவித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மாதவரத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழித்தடம் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேலாக உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டு அதன் வழியாக ரயில் தடம் அமைக்கப்பட உள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகளை உயர்மட்டப் பாலத்திலிருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்! அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்” என்று கூறியுள்ளார்.