பயணிகள் வசதிக்காக.. சென்னை மெட்ரோ ரயிலில் வருகிறது புதிய மாற்றம்...!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் நிலையில், அலுவலக நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-1 மூலம் இயக்கப்படும் ரயில்களின், குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் உள்ளன. அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக ஒரு ரயிலில் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 5 கோடிக்கு மேலாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மெட்ரோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் இரண்டாம் பாதையிலும் இதேபோல 6 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.