மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பரிதாப பலி.. ப்ரிட்ஜை திறந்ததால் நேர்ந்த சோகம்!
திருவள்ளூர் அருகே ஃப்ரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கௌதம். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இவர்களில் மூத்த பெண் குழந்தை ரூபவதி(5) தன் அம்மாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுவிட்டு தின்பண்டம் ஏதாவது இருக்கிறதா என தேடுவதற்காக ஃப்ரிட்ஜை திறந்து உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி அம்மா என்ற அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார், சிறுமி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. சிறுமியின் மழலைக் குரலை இனி எப்போது கேட்போம் என அக்கம்பக்கத்தினரும் உடைந்த மனதுடன் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இனியும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தவிர்க்க ஃப்ரிட்ஜை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மேலும் பிரிட்ஜின் கம்ப்ரசர் பழுதாகி உள்ளதா? அதன் குழாயில் ஏதாவது அடைப்பு உள்ளதா? என்பதை அடிக்கடி பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கம்ப்ரஸர் பழுதானால் மின்கசிவு பிரிட்ஜ் வெடிப்பது போன்ற அபாயகரமான நிகழ்வுகள் ஏற்படும் என டெக்னீஷியன் ஒருவர் தெரிவித்துள்ளார்.