அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்.. தொப்பூர் கணவாய் பகுதியில் கோர விபத்து.. 4 பேர் பலி!
தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்கு சேலம் - தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை (NH 44) பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. குறிப்பாக, லாரிகள், கண்டெய்னர்கள் என பல ஆயிரம் கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.
கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் மலைப்பாதை பகுதி சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ளது. இந்த சாலையில் கட்டமேடு முதல் போலீஸ் சோதனைச் சாவடி வரை உள்ள 3 கிலோ மீட்டர் சாலை மிகவும் சரிவாகவும், வளைவாகவும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மலைப்பாதையில் கனரக வாகனங்களை ஓட்டுவது டிரைவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. தமிழ்நாட்டில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக உள்ளது இந்த கணவாய் சாலை பகுதி. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்த வாகனத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து 4 பேர் பலி#Thoppur #Dharmapuri #Accident pic.twitter.com/pSbgdBWP1k
— A1 (@Rukmang30340218) January 25, 2024
படுகாயமடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து 2 லாரிகள், 3 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் நெல் பாரம் ஏற்றிச்சென்ற ஒரு லாரியும், 2 கார்களும் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விபத்து நடந்த தொப்பூர் கணவாய் பகுதிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.