சாலையோரம் நின்ற காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.. புதுக்கோட்டை அருகே பரபரப்பு
திருமயம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமுணசமுத்திரம் பகுதியில் இன்று (செப். 25) காலையில் சாலையோரம் கார் ஒன்று நின்றுள்ளது. காரின் ஜன்னல், கதவுகள் மூடப்பட்டிருந்ததால் ஆளில்லாத கார் நிறுத்தப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கருதியுள்ளனர். எனினும், கார் வெகுநேரம் அதே இடத்தில் நின்றதால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்ததில் அது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு கார் கதவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது 3 பெண்கள் உட்பட 5 பேர் காருக்குள் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, 5 பேரின் உடல்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காருக்குள் இறந்து கிடந்தது சேலம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (50), அவரது மனைவி நித்யா (48), தாயார் சரோஜா (70), மகள் நிகரிகா (22), மகன் தீரன் (20) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் மணிகண்டனின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சேலத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு காரில் வந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.