ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை.. கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்!

 
Rajapalayam

ராஜபாளையம் அருகே மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு ஆசிரிய தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம். இவரது மனைவி பழனியம்மாள் (44). இவர்களுடைய மகள் ஆனந்தவள்ளி (24). இவர் 8 வயது சிறுமியாக இருந்தபோது சாலை விபத்தில் சுந்தர மகாலிங்கம் இறந்துவிட்டார். இந்த நிலையில் பழனியம்மாள் ஆசிரியை ஆனார். சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார்.

அதே பள்ளியில் சிவகாசி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்த லிங்கம் (44) என்பவரும் ஆசிரியராக பணியாற்றினார். இவர் பழனியம்மாளை விரும்பி திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய மகன் ஆதித்யா (15). இவர்கள் திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே ஆசிரியர் லிங்கம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு இடமாறுதலாகி அங்கு வேலை செய்துவந்தார்.

dead-body

கணவன், மனைவி இருவருக்கும் நோய் பாதிப்பு இருந்த நிலையில் மருத்துவ செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆனந்தவள்ளியும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனந்தவள்ளி கர்ப்பம் அடைந்த நிலையில், பிரசவத்துக்காக திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆனந்தவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுவன் ஆதித்யா சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு பெற்று 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான். ஆசிரியர் லிங்கம், அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தாலும், இவர்களுக்கு அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

Thiruthangal PS

கடனை திருப்பி செலுத்த முடியாமல் லிங்கம், பழனியம்மாள் தவித்தனர். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், நேற்று கடன் வாங்கிய அனைவரிடமும் பணத்தை திருப்பி கொடுப்பதாக, ஆசிரியர் தம்பதியினர் உறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரிய தம்பதியின் வீட்டின் கதவு நேற்று காலை திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பகல் 11 மணி வரை வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் அடைந்து கதவை தட்டி உள்ளனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. எனவே திருத்தங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனித்தனி அறைகளில் ஆசிரியர் லிங்கமும், அவரது மனைவி பழனியம்மாளும் தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் ஆனந்தவள்ளி, அவரது குழந்தை சஷ்டிகா, சிறுவன் ஆதித்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

From around the web