சவர்மா சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கடைக்கு சீல்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

 
Pudukottai

புதுக்கோட்டையில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் பெரியார் நகரை சேர்ந்த யூசுப் என்பவர் சவர்மா கார்னர் என்ற பெயரில் சவர்மா கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் (49), அவரது மனைவி சர்மிளா பானு (40), இவர்களின் மகன்கள் அப்துல் ரகுமான் (7), முகமது அஸ்லாம் (15), மகள் சுமையா ரிஸ்வானா (18) ஆகிய 5 பேர் நேற்று இரவு சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

இந்த நிலையில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Pudukottai

இதையடுத்து சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை அந்த கடைக்கு வரவழைத்து காவல்துறையினரின் பாதுகாப்போடு சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமார், அந்த சிக்கனை பினாயில் ஊற்றி அளித்துவிட்டு உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், “சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளோம். அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் அதற்கென்று உரிய முறையில் உணவு தயாரிக்க தெரிந்தவர்தான் அதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தெரிந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் அந்த கடையை நடத்த வேண்டும்.

Pudukottai

தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ரோல் சாப்பிட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் அவர்கள் சாப்பிட்ட உணவால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வுக்கு பின்னர்தான் அது தெரியவரும்” என்று தெரிவித்தார்.

From around the web