தவெக முதல் மாநில மாநாடு.. 33 நிபந்தனைகள் விதித்த காவல்துறை
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ள காவல்துறை, 33 நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
கட்சிக் கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தனது முதல் அரசியல் மாநாட்டினை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வருகின்ற 23-ம் தேதி நடத்த திட்மிட்டுள்ளார். மாநாடு நடைபெறுவதற்கு 85 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யபட்டு மாநாடு நடத்த அனுமதி கோரி கடந்த 28-ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆய்வு செய்த காவல் துறையினர், ‘மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை’ என்பதால் 21 கேள்விகள் கேட்டு கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதனை பெற்றுகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை கடந்த 6-ம் தேதி கொடுத்தார். அதனை தொடர்ந்து காவல்துறை அனுமதி தொடர்பாக இன்று நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பின் பேரில் இன்று காவல் நிலையம் சென்ற அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, வழக்கறிஞர் அரவிந்த் ஆகியோர் சீலிடப்பட்ட மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தை டிஎஸ்பி சுரேஷிடமிருந்து பெற்றுக் கொண்டனர். அக்கடிதத்தில், சில நிபந்தனைகளுடன் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
தவெக மாநில மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி:
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும்.
- அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டுவிட்டு தற்போது கேட்கப்பட்ட 21 கேள்விகளில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்லி இருக்குறீர்கள். இதற்கு என்ன காரணம்? 50 ஆயிரம் பேர் அளவுக்குதான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.
- அதேநேரம், மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் பார்த்தால், 20 ஆயிரம் பேர்தான் வர முடியும். ஏன் இப்படி கொடுத்துள்ளீர்கள்?
- மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
- மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மாநாட்டு பரப்பளவு 85 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மாநாட்டு மேடை, மற்றும் மாநாட்டிற்கு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும்.
- பார்க்கிங் இடத்திற்கும், மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
- மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
- மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில், ரோடு மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்
- தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதால் அவசரத்தில் பலர் இந்த சாலையை கடந்து செல்வார்கள். ஆகவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்.
- பார்க்கிங் இடத்திலிருந்து மக்கள் மாநாட்டு இடத்திற்கு வருகையில் பாதுகாப்பிற்கு, தன்னார்வலரை பயன்படுத்தவும்.
- கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.
- மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். பொதுப்பணித் துறை பொறியாளரிடம் மேடையின் உறுதித்தன்மையை பெற வேண்டும்.
- மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும், கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கை கூடாது.
- மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது? அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
- மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும். மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
- மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.
- தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்
ஆகியவை உட்பட, 33 நிபந்தனைகளை வழங்கி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது.