விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு.. தேதியை அறிவித்தார் நடிகர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை விரைவில் அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும், பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) September 20, 2024
இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும், ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!” என்று தெரிவித்துள்ளார்.