முதலமைச்சர் செல்லாத முதல் இடைத்தேர்தல்! ஈரோடு கிழக்கு ஆச்சரியம்!!

பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர்,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்களாக இருந்து சந்தித்த இடைத்தேர்தல்களில் முதலமைச்சரின் பிரச்சாரம் என்பது ஒரு நாளாவது இருந்து வந்துள்ளது.
அண்ணா பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது விருதுநகர் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுப் போனார் காமராஜர். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு டெல்லி சென்றார் காமராஜர். அந்த தேர்தலின் போது அண்ணாவுக்கு உடல்நலக்குறைவு என்பதால் பரப்புரைக்கு செல்ல இயலவில்லை. அதனால் அவருடைய புகைப்படத்தைப் வெளியிட்டு பிரச்சாரம் செய்தனர்.
ஏற்கனவே உடல்நலக்குறைவாக உள்ளவரை போட்டோ எடுத்து கெடுக்கிறார்கள் என்று காமராஜர் சொன்னதாக ஒரு செய்தி உலவுவது உண்டு. அந்த வகையில் அண்ணா செல்லமுடியாத அந்தத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் இடைத்தேர்தலுக்கு செல்லாதது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் மட்டுமே!.
எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் நாம் தமிழர் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து அந்தக் கட்சிக்கு விளம்பரம் தேடித்தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகிய இருவரும் கூட பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை. அமைச்சர்கள் முகாம் இல்லாமல் மாவட்ட அமைச்சர் முத்துசாமி மட்டுமே களத்தில் இருந்து வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
திமுகவினர் சொல்வது போல இந்தத் தேர்தல் முடிவு 2026ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாகவே தெரிகிறது.