தங்கும் விடுதியில் தீ விபத்து.. 2 பெண்கள் பலி.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் இன்று அதிகாலையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆசிரியைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த ஆடைகள் எரிந்து பிற அறைகளுக்கும் தீ பரவியது. மற்ற அறையில்இருந்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர்.
இருப்பினும், இந்த விபத்தில் வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா(22) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து திடீர் நகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்த விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். இச்சம்பவம் பற்றி திடீர்நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது, பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கிவந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.