3 நாட்களாக தொடர்ந்த காய்ச்சல்.. 8-ம் வகுப்பு மாணவி பலி.. காரைக்குடியில் பரபரப்பு சம்பவம்!

 
Karaikudi

காரைக்குடியில் காய்ச்சலுக்கு எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்ரமணியபுரம் 3வது வீதியில் வசித்து வருபவர் பாண்டி. இவர் டாக்ஸி டிரைவராக உள்ளார். இவரது மகள் மேகலா (13). இவர், அங்குள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த நிலையில், மேகலாவுக்கு கடந்த வியாழக்கிழமை பள்ளியில் இருந்து வந்தபோது காய்ச்சல் இருந்துள்ளது. மேகலாவை அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வந்துள்ளார்.

Fever

இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவ. 5) காலை மீண்டும் காய்ச்சல் அடித்ததால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேகலாவுக்கு, ரத்த பரிசோதனை எடுக்காமல் எந்த வகையான காய்ச்சல் என்றும் சொல்லாமல் மீண்டும் ஊசி போட்டு அனுப்பியுள்ளனர். 

எனினும், மேகலாவுக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததுடன், தொடர்ந்து வாந்தியும் வந்துள்ளது. இதனையடுத்து, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேகலாவை அவரது பெற்றோர் கொண்டுச் சென்றனர். அங்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மேகலா உயிரிழந்தார். 

Dead

மாணவிக்கு எந்த மாதிரியான நோய் தாக்கம் செய்யப்பட்டது எனக் கண்டறியும் முன்பே, அவர் உயிரிழந்தார். ஆய்வு முடிவுக்கு பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web