குடும்ப தகராறில் 3 வயது மகனை ஏரியில் வீசிய கொடூர தந்தை.. சென்னையில் பயங்கரம்
![Chennai](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/177e4194bc3cfd03ff50fe58d110294c.webp)
சென்னையில் குடும்ப தகராறில் 3 வயது சிறுவனை தந்தையே ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வயது சிறுவனுடன் வந்த ஒருவர், போரூர் ஏரி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சிறுவனை, திடீரென போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஏரிக்குள் நீந்திச் சென்று ஏரியில் தத்தளித்து கொண்டிருந்த சிறுவனை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த சிறுவனை போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஏரியில் சிறுவனை வீசிவிட்டு சென்றது, சென்னை தலைமை செயலக காலனியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், ஏரியில் வீசி சென்ற சிறுவன் அவரது மகன் தர்சன் என்பதும் தெரியவந்தது.
மோகன்ராஜ், தனது மனைவி பிரியாவுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை வீட்டுக்குள் அடைத்து கதவை வெளிப்புறமாக பூட்டினார். பின்னர் கோபத்தில் தனது 3 வயது மகன் தர்சனை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து போரூர் ஏரியில் வீசிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சிறுவனின் தாய் பிரியாவுடன் போரூர் காவல் நிலையம் வந்தனர். அங்கு தாயிடம் சிறுவனை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெற்ற மகனையே ஏரியில் வீசி விட்டு தப்பி ஓடிய கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.