அப்பா மகன் தகராறு! அடுத்து வருது புதுக்கட்சி!!
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் களம் புதிய பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.சாட்டையடி மூலம் கடும் விமர்சனத்திற்குள்ளானார் அண்ணாமலை. அதே வேளையில் பொது மேடையிலேயே அப்பா மகன் மோதல் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் இந்த மோதல் நடந்துள்ளது.
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் மோதல் பகீரங்கமாக வெடித்துள்ளது. பாமக மாநில இளைஞரணித் தலைவராக முகுந்தன் பரமேஸ்வரன் என்பவரை மேடையில் அறிவித்தார் ராமதாஸ். கட்சியில் சேர்ந்து 4 மாதத்திற்குள்ளாகவே மாநிலப் பொறுப்பா என்று உடனே பொங்கி எழுந்தார் அன்புமணி.
நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டுமே இங்கே இடம் என்று முழங்கினார் ராமதாஸ். உடனடியாக எனக்கு பனையூரில் ஒரு அலுவலகம் உள்ளது.என்னை அங்கே சந்திக்கலாம் என்று தொலைபேசி எண்ணை மேடையிலேயே அறிவித்தார் அன்புமணி.
முகுந்தன் என்பவர் ராமதாஸின் நெருங்கிய உறவினர் எனவும், அன்புமணியின் தலைமையில் பாமகவின் செயல்பாடுகள் ராமதாஸுக்கு உடன்பாடில்லை என்பதால் குடும்பத்திலிருந்து அடுத்து ஒரு தலைவரை உருவாக்கவே முகுந்தனை கொண்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் அன்புமணி வேறு ஒரு முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவுடன் நெருக்கமாக அன்புமணியும் அதிமுக பக்கம் சாய்வதற்கு ராமதாஸும் விரும்புவதால் தான் இந்த மோதல்போக்கு என்ற கருத்தும் உலவுகிறது. பாமக இரண்டாக உடையும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.