வெள்ளத்தில் மூழ்கி தந்தை, மகள் பரிதாப பலி.. தூத்துக்குடியில் சோகம்!

 
Thoothukudi

தூத்துக்குடியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தந்தையும், மகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் அமணன் (52). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நிலையில், இளைய மகள் அங்குள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த சூழலில் தான், கடந்த 17-ம் தேதி காலை முதல் தூத்துக்குடியில் பேய் மழை கொட்ட தொடங்கி இரவு அங்கிருந்த வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதில் அமணனின் வீடும் ஒன்று. நேரம் செல்ல செல்ல, வெள்ள நீர் மட்டம் உயர்ந்து கொண்டே சென்றுள்ளது. ஒருகட்டத்தில் அவர்களின் வீட்டுக்குள் இடுப்பளவு நீர் வந்துள்ளது. இதனால் பயந்து போன அமணன், தனது மனைவி மற்றும் 2 மகள்களை கூட்டிக் கொண்டு 4 தெரு தள்ளி வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

water

நெஞ்சளவு தண்ணீரில் அவர்கள் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நீரின் இழுவை விசை அதிகமானதால் அவரது 2வது மகளான அக்ஷிதா நிலைத்தடுமாறி கீழே விழ, அவரை வெள்ளம் இழுத்துக் கொண்டு சென்றது. இதை பார்த்து பதறிப்போன தந்தை அமணன், மகளை பிடிக்க பாய அவரையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை.

அப்போது அவரது மூத்த மகள் சட்டென விரைந்து சென்று அவரது தங்கையின் முடியை பிடித்து விட்டார். ஆனால் அவரை அவரால் மேற்கொண்டு இழுக்க முடியாததால் அவர் அங்கேயே தண்ணீரில் தத்தளித்து உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அமணனின் கதி என்னவானது என்று தெரியாமல் அவர்கள் இரண்டு நாட்களாக இருந்த நிலையில், அவரும் உயிரிழந்துவிட்டதாக அவர்களுக்கு நேற்றுதான் தெரியவந்துள்ளது.

dead-body

ஆனால், இன்னமும் தனது தந்தையின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தான் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகம் கொடுத்ததும் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என கண்ணீர் விட்டு கதறியடி அவரது மூத்த மகள் கூறினார். மேலும், குடும்பத்தில் சம்பாதித்து கொடுத்த ஒரே நபரான தந்தையும், கல்லூரி படிப்பை முடிக்கப் போகும் தங்கையும் இறந்துவிட்டதால் அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவரும், அவரது தாயாரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

From around the web