கோவையில் குட்டையில் மூழ்கி தந்தை மகள் உள்பட 3 பேர் பலி.. நீச்சல் கற்றுக் கொடுக்க சென்றபோது சோகம்!

 
Sultanpet

கோவை அருகே குட்டையில் மூழ்கி தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அதே பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், தனது 15 வயது மகள் தமிழ்செல்வி மற்றும் 13 வயது அண்ணன் மகள் புவனா ஆகிய இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள குட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். 

dead-body

மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்ச்செல்வி மற்றும் புவனா ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளனர். இருவரையும் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்ற மணிகண்டன் சேற்றில் சிக்கிக் கொண்டதால் மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குளிக்கச் சென்ற மூவரும் திரும்ப வராததால் சந்தேகம் அடைந்த மணிகண்டனின் மனைவி, குட்டைக்கு சென்று பார்த்துள்ளார். 

அப்போது கரையில் செருப்புகள் மட்டுமே கிடந்ததால் சந்தேகம் அடைந்த அவர், ஊர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் குட்டையின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த மூவரது உடல்களையும் மீட்டனர். மூவரது உடல்களையும் கைப்பற்றிய சுல்தான்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Sultanpet PS

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த டிஎஸ்பி தங்கராமன், பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் சேறு நிறைந்த ஆழம் அதிகம் உள்ள இது போன்ற நீர் நிலைகளில் குளிக்க தடை என எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார். மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க குட்டைக்கு அழைத்துச் சென்ற தந்தை உட்பட மூவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web