ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தந்தை, மகள்.. தந்தை மீட்பு.. 6 வயது சிறுமி மாயம்.. குமரியில் பரபரப்பு

 
Puthukkadai

தேங்காய்பட்டினம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் தேங்காய்பட்டினம் கடற்கரை உள்ளது. தென்னை மரங்கள் நிறைந்த இந்த கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமானது. தற்போது கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு வருகை தருகின்றனர்.

water

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அடுத்த விழுந்தைம்பலம் பகுதியை சேர்ந்தவர் பிரேமதாஸ். இவரது மகள் ஆதிஷா (6). விடுமுறை நாளான இன்று பிரேமதாஸ் தனது மகளை அழைத்துக் கொண்டு தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். இருவரும் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்துச் சென்றது. 

இதையடுத்து அவர்களின் கூச்சல் சத்தத்தைக் கேட்ட மீனவர்கள், கடலுக்குள் நீந்தி பிரேமதாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவரது மகள் ஆதிஷாவை மீனவர்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

Puthukkadai PS

இதுகுறித்து புதுக்கடை போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கடற்கரைக்கு சென்ற நிலையில் சிறுமி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web