பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட்ட ரசிகர்கள்.. அமைச்சர் உதயநிதி கண்டனம்!

 
Rizwan

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 30.3 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Udhayanidhi

பாகிஸ்தான் பேட்டிங்கின்போது அந்த அணியின் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் அவர் பெவிலியன் திரும்பியபோது அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர். ரிஸ்வானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்களின் செயலுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா விருந்தோம்பலுக்கும், விளையாட்டு பண்புக்கும் பெயர்போன நாடு. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இது தரம் தாழ்ந்த செயலாகும். விளையாட்டு இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாகவும், சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதனை வெறுப்பை பரப்பும் சக்தியாக பயன்படுத்துவதை கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

From around the web