குடும்ப தகராறு.. கணவன் - மனைவி தூக்குப்போட்டு தற்கொலை.. ஆவடியில் சோகம்!

 
Avadi

ஆவடியில் குடும்ப தகராறில் கணவன் - மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்து உள்ள அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரகாஷ் (40). இவர், ஆவடி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு தீபக் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர்.

பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம் பிரகாஷ் சாப்பிட வீட்டுக்கு வந்தார். அப்போது இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

suicide

இதனால் மனம் உடைந்த சத்யா, வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், வீட்டின் ஹாலில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தம்பதி இருவரும் நீண்ட நேரம் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆவடி போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

Avadi PS

இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அவர்களுடைய மகன், மகள் இருவரும் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்பதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

From around the web