கள்ளக்கதாலனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலி.. ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்!

 
Chennai

திருவொற்றியூரில் ஆபாசமாக பேசி, அடித்து உதைத்ததால் தொழிலாளியை துணியால் கழுத்தை நெரித்து கள்ளக்காதலி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் வஉசி நகரை சேர்ந்தவர் சுப்பையா (56). இவர், வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 25 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சுப்பையா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சுப்பையாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் 2 குழந்தைகளுக்கு தாயான செல்வி (48) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இருவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக சேர்ந்து குடித்தனர். அப்போது சுப்பையா, தனது கள்ளக்காதலியான செல்வியை ஆபாசமாக பேசி, அடித்து உதைத்துவிட்டு போதையில் படுத்து தூங்கிவிட்டார். 

Murder

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, நள்ளிரவில் சுப்பையா மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவர் கழுத்தை துணியால் நெரித்து கொலை செய்தார். பின்னர் ஒன்றும் நடக்காததுபோல் அதிகாலை 3 மணியளவில் அதே தெருவில் வசிக்கும் சுப்பையாவின் மகள் வீட்டுக்கு சென்று, சுப்பையா குடிபோதையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நான், உடலை கீழே இறக்கி வைத்துள்ளேன் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகள், தங்கள் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது சுப்பையா கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டனர். செல்வியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுப்பையாவின் உறவினர்கள், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ennore PS

பின்னர் செல்வியை பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தபோது, “குடிபோதையில் சுப்பையா தன்னை ஆபாசமாக பேசி, அடித்து உதைத்ததால் ஆத்திரமடைந்த நான், போதையில் செய்வதறியாது அவரது கழுத்தை துணியால் நெரித்து கொன்று விட்டேன்” என்று கூறினார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பையா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

From around the web