ஒசூர் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து.. சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

 
Hosur

ஓசூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி கரும்புகை சூழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இங்கு பட்டாசுகளை சேமித்து வைத்து, பண்டிகை காலங்களின் போது வடிவேலு விற்பனை செய்து வந்தார். சுமார் 50 முதல் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Hosur

இந்த நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Hosur

சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது அந்த குடோனில் பணியாளர்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பட்டாசு புகை வீடுகளை சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் கண் எரிச்சல், சுவாச கோளாறுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

From around the web