சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 5 பெண்கள் உள்பட 8 பேர் பலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 
Sivakasi Sivakasi

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டி பகுதியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 7 அறைகளில் இன்று தொழிலாளர்கள் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து அடுத்தடுத்து உள்ள 7 அறைகளுக்கும் பரவியதில் அங்கிருந்த பட்டாசுகளும், வெடி பொருட்களும் வெடித்து சிதறியது.

இதனால் பல மீட்டர் உயரத்துக்கு புகைமண்டலம் பரவியது. பணியில் 16 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 5 பெண்கள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Sivakasi

இதனிடையே படுகாயம் அடைந்த 13-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, “சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.


உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web