5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கருவிலேயே கொன்ற முன்னாள் அரசு செவிலியர்.. மதுரையில் பயங்கரம்!

 
Madurai

மதுரையில் கர்ப்பத்திலேயே பெண் குழந்தைகளை கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வந்த முன்னாள் அரசு செவிலியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி. இவருக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அண்மையில் மீண்டும் கர்ப்பமடைந்தார். வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிய மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.

காந்திமதி சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காயத்ரியை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்து காயத்ரிக்கு மூன்றாவதும் பெண் குழந்தை என்பதை உறுதி செய்துள்ளார். பின்னர், காயத்ரியிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு காந்திமதியின் வீட்டிலேயே வைத்து காயத்ரிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

abortion

இதையடுத்து, காயத்ரிக்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது காயத்ரி கருக்கலைப்பு செய்தது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில், சட்ட விரோதமாக தான் கருக்கலைப்பு செய்ததை காயத்ரி ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த 2019-ம் ஆண்டில் சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்த காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று இருப்பது தெரியவந்தது. விருப்ப ஓய்வு பெற்று விட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே போல கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்தவுடன் அவற்றை கருக்கலைப்பு செய்யும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

Alanganallur PS

ஆண்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பெண் சிசு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என சுகாதாரத் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், காந்திமதிக்கு உதவிய  சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் விஜயலஷ்மி என்பவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காந்திமதியை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார், கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

From around the web