ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி.. வெளியான மருத்துவமனை அறிக்கை!!

 
EVKS

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என அதன் கூட்டணி கட்சியான திமுக தலைமை அறிவித்தது. 

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழ்நாடு அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தனர். பின்னர் காங்கிரஸ் கட்சியானது திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது. 

EVKS

இதையடுத்து கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் 74.79% வாக்குகள் பதிவாகின. கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழ்நாடு சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். 38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக ஈவிகேஎஸ் இளங்கோவன் நுழைந்தார். 

இந்நிலையில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது.

EVKS

இந்நிலையில் நெஞ்சு வலி காரணமாக ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது வரை உடல் நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவலளித்துள்ளது. மேலும் 6 வது மாடியில் ஐசியூ வில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர உள்ளதாகவும், அவர்கள் வந்த பிறகு அவர் உடல் நலம் குறித்து தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web