ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களுக்கு தடை உத்தரவு.! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
TASMAC

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ம் தேதி காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (பிப். 27) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.

TASMAC

ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும், நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் அதாவது வரும் திங்கட்கிழமை (பிப். 27) வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tasmac

அதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ம் தேதி மட்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

From around the web