தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை.. பகுஜன் சமாஜ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில்
விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகம் தனது கொடியில் பயன்படுத்தி இருப்பதாக அக்கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் அரசியல் கட்சிக் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்காது. எனவே, தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் யானையை சின்னமாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.