ஆவடியில் தடம் புரண்ட மின்சார ரயில்.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்!

 
Train

ஆவடியில் மின்சார ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளனதால், சென்னைக்கு வரும் புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலேயே சென்னையில் மட்டும் தான் புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழித்தடத்திலும், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை வழித்தடங்களிலும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Train

இந்த நிலையில், அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டு இருப்புப் பாதையை விட்டு விலகிச் சென்றன. பணிமனையில் இருந்து புறப்பட்ட ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக, சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில், மேற்கு மண்டல ரயில்கள், வடமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள் பலரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


பெட்டிகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கு பனிமூட்டம் காரணமா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலை ஓட்டிவந்த ரவி என்பவர் மயங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

From around the web