நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை.. சென்னிமலை அருகே பயங்கரம்!

 
Chennimalai

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை மர்ம கும்பல் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (74). இந்த தம்பதிக்கு வசந்தி (55), கலையரசி (50), கவிதா (45) என்ற 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இதில் 2-வது மகள் கலையரசி பெருந்துறை அருகே தோப்புப்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி கரியங்காட்டு தோட்டத்தில் வசிக்கும் தனது தாய், தந்தையை பார்த்து விட்டு செல்வது வழக்கம். 

நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் கலையரசி தனது தாய், தந்தையை பார்த்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திங்கட்கிழமை காலை நடைபெறும் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்தம் எடுத்து செல்வதற்கு தனது பேரன் (கலையரசியின் மகன்) அஜீத் (26) என்பவரை ஏற்கனவே முத்துசாமி அழைத்துள்ளதாக தெரிகிறது. அதன்பேரில் காலை 7 மணி அளவில் கரியாங்காட்டு தோட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அஜீத் சென்றார். 

murder

அப்போது வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது முத்துசாமியும், சாமியாத்தாளும் முகங்கள் சிதைக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுமட்டுமின்றி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தன. பின்னர் இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த முத்துசாமி, சாமியாத்தாள் ஆகியோரின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இரும்பு கம்பி போன்ற ஆயுதத்தால் முத்துசாமியையும், சாமியாத்தாளையும் கொள்ளையர்கள் அடித்து கொன்று இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Chennimalai PS

முத்துசாமியின் வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் கரும்பு விற்று வைத்திருந்த பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web