கீழடி அறிக்கையில் திருத்தம் செய்யுங்கள்.. ஒன்றிய அரசின் தொல்லியல் துறை விளக்கம்!

தொல்லியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் சமர்ப்பித்த கீழடி அகழ்வாய்ச்சி அறிக்கையை வெளியிடுவதல் ஒன்றிய தொல்லியல் துறை தாமமதப்படுத்துவதாக குற்ற்ச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்த துறை தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.
“கீழடி அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கீழடி அகழ்வாராய்ச்சியாளர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஊடகங்களை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கேட்டுக்கொள்கிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களின் காலக் குறியீட்டை கார்பன் ஆராய்ச்சிகள் உறுதி செய்தநிலையில் அதை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை ஏற்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.