அரசியல் முடிவுரையை எழுதிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுளீர்!!

 
EPS Stalin EPS Stalin

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மகாத்மா காந்தி திட்டத்தை மூடி விட்டு புதிய திட்டம் அறிவித்த ஒன்றிய அரசை பாராட்ட முதலமைச்சருக்கு மனமில்லை என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ப்திலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

"விபி ஜி ராம்-ஜி திட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்து குரல் கொடுக்க துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்த போதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பாஜ அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?.

உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்கு கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையை கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே. என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?

டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பாஜ அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்


 

From around the web