பாஜக உடன் கூட்டணி ‘இல்லை, இல்லை, இல்லை..’  எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

 
ADMK

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றும் மீண்டும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்ஜிஆர் குறித்து பேசிய பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டில் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கூட்டணியை விட்டு விலகியது. அதையடுத்து இரு கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், பர்கூர் ஊராட்சி ஒன்றியக்குழு திமுக பெருந்தலைவர் கவிதா மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள், துணைத் தலைவர்கள், மற்றும் காங்கிரஸ், பாமக, பாஜக, சிபிஜ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 10 ஆயிரம் பேர் இணையும் விழா நடைபெற்றது.

ADMK

இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளர்  முனுசாமி தலைமை வகித்தார். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் விதைகள் தான் தற்போதைய புதிய தொழிற்சாலைகளாக உருவாகி இருப்பதாக கூறினார். திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பைகளுக்கு கூட வரி போட்டுள்ளதாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் இன்று முதல்வர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை பார்க்க முடியாமல் இருப்பதே திமுக ஆட்சியின் அவலத்தை காட்டுவதாக கூறினார்.

EPS

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு எதையும் செய்ய முடியாததால், அதிமுகவை குறை சொல்வதையே வேலையாக வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு சட்டப்பேரவையில் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்களில் பலர் சிறைக்கு செல்வர் என்றார். அதிமுகவிற்கு துரோகம் இழைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது போல், அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், அதிமுக பாஜகவுடன் ரகசிய கூட்டணியில் இருப்பதாக திமுக பொய் பிரசாரம் பரப்புவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறினார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியில் இருக்கும் நிலையில், அதிமுகவில் தேர்தல் கூட்டணி குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றவர், நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்றார்.

From around the web