சென்னையில் நில அதிர்வு..? தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் சொன்ன முக்கிய தகவல்!

 
Chennai

சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.

துருக்கி நாட்டில் கடந்த 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக நிலநடுக்கம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இந்தியாவிலும் வடமாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் நிலநடுக்கம் வீரியமிக்கதாக இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பாதிப்புகள் ஏற்படாமல் உள்ளது.

இந்நிலையில் தான் சென்னை அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோடு மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பயந்துப்போன ஊழியர்கள் அலறியடித்தபடி அலுவலகங்களில் இருந்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

chennai

மேலும் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் நிலநடுக்கம் என்பதை மறுத்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டது. அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை” என தெரிவித்தார். டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் என்பது இந்தியாவில் ஏற்படும் நிலஅதிர்வுகளை பதிவு செய்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம், “சென்னையில் நிலநடுக்கம், நிலஅதிர்வு என எதுவும் ஏற்படவில்லை. நிலநடுக்கம், நிலஅதிர்வு என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணரப்படாது. மாறாக மக்கள் நிலஅதிர்வை உணர்ந்திருந்தால் அது வேறு காரணங்களால் நடந்திருக்கலாம்” என தெரிவித்துள்ளது. அதாவது நிலஅதிர்வு ஏற்பட்ட இடத்தில் பூமியை தோண்டுதல், ஏதேனும் வெடிபொருட்கள் பயன்படுத்தினால் அதனை சுற்றிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்படலாம் என்ற வகையில் தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

CMRL

இந்நிலையில் தான் தற்போது சென்னையில் மெட்ரோ பணிகள் நடக்கின்றன. சுரங்கும் தோண்டும் பணிகளுக்கும் நடைபெற்று வருகிறது. இதனால் மெட்ரோ பணிகள் காரணமாக நிலஅதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை. இதனால் நிலஅதிர்வுக்கு மெட்ரோ பணிகள் காரணமாக இருக்காது என சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நிலஅதிர்வை உணர்ந்ததாக மக்கள் கூறும் நிலையில் அதற்கான காரணம் என்ன? என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் மக்கள் குழம்பி உள்ளனர்.

From around the web