காது வலி.. மருத்துவமனைக்கு சென்ற ப்ளஸ்-1 மாணவி உயிரிழப்பு... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!!

 
chennai

சென்னையில் தனியார் மருத்துவமனையில் காதுவலிக்கு சிகிச்சைப் பெற்ற ப்ளஸ்-1 மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரது மகள் அபிநயா (16). இவர்  ராயபுரத்தில் இயங்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு சிறு வயது முதலாகவே காது வலி இருந்து வந்துள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு அவருக்கு காது வலி ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் படிப்பிலும் அபிநயாவால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், இந்த காது வலிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாய் நந்தினி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, காது பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்தால்தான் காது வலியை சரிசெய்ய முடியும் எனக் கூறியுள்ளனர். 

chennai

இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 15-ம் தேதி மாணவி அபிநயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அன்றைய தினம் இரவு அபிநயாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், அறுவை சிகிச்சை முடிந்ததும் அபிநயாவுக்கு திடீரென இதயத் துடிப்பு அதிகமானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வேறொரு தனியார் மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது இதயத் துடிப்பு சீராகவில்லை. அதன் பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

Rajiv-gandhi-gh-doctors-arrested

இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web