ஓடுநர் உரிமம் ரத்து? பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது.. போலீசார் அதிரடி

 
TTF Vasan

பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

பாதுகாப்பான முறையில் வாசன் பைக்கை ஓட்டினாலும் அவர் 2கே கிட்ஸ்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. விமர்சனங்களைத் தாண்டி டிடிஎஃப் வாசனை யூடியிபில் சப்ஸ்கிரைப் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.

vasan

தற்போது இவர், ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே டிடிஎஃப் வாசன், நேற்று முன்தினம் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்று தனது பைக்கில் வீலீங் செய்தார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

TTF Vasan

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் போலீசார், டிடிஎஃப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், டிடிஎஃப் வாசன் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், பைக்கில் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web