திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள்.. தவெக கொள்கையை விளக்கிய விஜய்!
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.
தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், “கொள்கை அளவுல திராவிடத்தையும் தமிழ்த்தேசியத்தையும் நாம பிரித்து பாக்க போறது இல்ல. திராவிடமும் தமிழ்த்தேசியமும் இந்த மண்ணுடைய இரு கண்கள். நாம் எந்தவொரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளும் நம்மை சுருக்கி கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்.
ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை, மாநில தன்னாட்சி, இருமொழி ஆட்சி கொள்கை, இயற்கை வளப்பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதையில்லா தமிழகம் என்கிற கொள்கையின் அடைப்படையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது தான் நமது நோக்கம். கால மாறுதலுக்கு ஏற்ப கொள்கையில் மாற்றமும் மாறுதலும் வந்துதான் தீரும். அதை தவிர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.