டாக்டர்.ராமதாஸ் பொய் சொல்லுகிறார்.. இது மகன் அன்புமணியின் டயலாக்!!

 
anbumani

பாமக வில் அப்பா ராதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் நடக்கும் உச்சக் கட்ட சண்டையில் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டாக்டர்.ராமதாஸ் பொய் சொன்னதாக அன்புமணி பேசியுள்ளார். பாஜக மாமனா, மச்சானா? ராமதாஸ் சொல்லித்தான் பாஜகவுடன் கூட்டு வைத்தேன் என்று கூறியுள்ளார் அன்புமணி.

அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி “திமுக தான் பாமகவுக்கு எதிரி. திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் வந்தது? ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு ஏன் திடீர் அன்பு?

வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது? என்றைக்காவது ஒருநாள் ராமதாஸை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்? செல்வபெருந்தகைக்கு தற்போதைய திடீர் பாசம் ஏன் ஏற்பட்டது? திடீரென ராமதாஸை சந்திப்பது ஏன்? இதெல்லாம் திமுகவின் சூழ்ச்சி. இது குறித்து எல்லாம் யோசிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக ஐயா (ராமதாஸ்) ஐயாவாக இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு அவர் தெரிவித்தார். அவருக்கு பிறகுதான் நான் தலைவராக வேண்டும் என்று நான் அப்போதே முடிவு எடுத்துவிட்டேன். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். பாமக அவர் உருவாக்கியதுதான். ஆனால், வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுய லாபத்துக்காக, அவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அது தெரிந்த பிறகுதான் நான் தலைவராக ஒப்புக்கொண்டேன்.

அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கூடாது. அவர் சொல்லிதான் பாஜகவுடன் 2024-ல் கூட்டணி பேசினேன். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தைலாபுரம் தோட்டம் வந்து சென்றபோது, அவர் எதற்காக வந்தார் என்று நான் அவரிடம் கேட்டதற்கு, அவர் பத்திரிகை வைக்க வந்து சென்றதாக என்னிடம் தெரிவித்தார். அதிமுகவுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்ல போகிறேன். அவர் சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. ஆனால், தற்போது அவர் இல்லை என்று மறுக்கிறார்.

ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய். கடந்த இரண்டு மாதமாக கட்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், செய்திகள் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு கொண்டு சென்று விட்டது. தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பெற்ற மகனையும், மருமகளையும் யாராவது ஊரின் முன்னால் நேரலையில் பேசுவார்களா?

பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னதால் தான் கூட்டணி பேசி முடித்தேன். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவர் பேசியது பொய். பாஜக எனக்கு மாமனா, மச்சானா... அவர்களுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று நான் சொல்வதற்கு.

25 ஆண்டுகளாக நான்தான் கூட்டணி பேசி வருகிறேன். அதிமுக உடன் கூட்டணி பேச வேண்டும் என்று சொன்னால் நான் அப்போதே பேசி இருப்பேன். அவர்தான் பாஜகவுடன் பேச சொன்னார். எல்லாம் பேசி முடித்து கூட்டணி எல்லாம் நிறைவடைந்த பிறகு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை எனக்கே தெரியாமல் நடைபெற்றது”  என்று பேசியுள்ளார்

From around the web